இதுநாள் வரை
பலர் இறந்திருக்கின்றனர் !
உலகம் இன்னும்
உயிருடன் இருக்கின்றது !!
ஆனால் பெண்ணே
இன்று நான்
உயிருடன் இருக்கிறேன் !
என் உலகம் இறந்து விட்டது !!
சத்தியமாக இதற்காக
நான்
கவலைப்படப் போவதில்லை !
ஆனால்
என் கவிதைகள்
கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றன !!
உன்னைப் பற்றி
நினைக்கையிலே
என் அறைக் கதவைத்
தட்டுகிறார்கள் !
உன்னைப் போலவே
இரக்கமில்லாதவர்கள் !!
சிரித்தால் ஆயுள் கூடுமாமே !
யார் சொன்னது ?
உன் சிரிப்பு
என் ஆயுளைக்
குறைத்துக்கொண்டிருக்கிறது !!
நீ அலைகளில்
கால் நனைக்கையில்
உன் கொலுசைப் பார்த்திருந்தேன் !
கரையில் இருக்கும்
உன் செருப்பிற்குக்
காவலான நான் !!
கடவுள் தரும்
வரம் வேண்டாம் !
நீ தரும்
சாபம் போதும் !!
அடிக்கடி தோன்றுகிறது —-
அதைச் சொல்லியிருக்க வேண்டாம் !
சொல்லாமல் இருந்திருந்தால்
நிச்சயம் தோன்றியிருக்கும் —-
‘சே சொல்லியிருக்கலாம்’ !!
தயவு செய்து நான்
உன்னைப் பார்க்கையில்
முகத்தைத் திருப்பிக்கொள் !
என்னைக்
கண்டுகொண்டாயென்று
மகிழ்ச்சி அடைவேன் !!