All Startup Poems தமிழ் கவிதை Talks & Interviews

என் இதயத்தின்
ஒவ்வொரு நரம்பும்
நீ ஏறும் பேருந்து நிறுத்தம் !
எல்லா நிறுத்தத்திலும் ஏறும் நீ
எதிலும் இறங்குவதில்லை !!

உன் இமைகளின்
அடியில் குடியிருந்தும்
உன் பார்வையில் படாத
துரதிர்ஷ்டசாலி நான் !!

உன்னைச் சுற்றி
வண்டுகளின் ரீங்காரம் !
நீ மலரென
நினைத்துக்கொண்டு !!

உன் கால்பட்ட களைகள்
வளர வேண்டுமென
நெற்பயிர்களைப்
பிடுங்கி விட்டேன் !!

உன் கூந்தல் அசைகிறது !
உன் விழிகளும் அசைகின்றன !
உன் துப்பட்டாவும் அசைகிறது !
அசைய மறுத்து இறுகி நிற்கிறது
உன் மனம் !!

உன் பரந்து விரிந்த
கூந்தலில்
குறுகி இருக்கிறது
என் உலகம் !!

உன் அழகின் ஒளியில்
குருடனான பின்
நீ என்னிடம் கூறுகிறாய்
என்னைப் பார்க்காதே !!

வகுப்பு முழுவதும்
உன் கூந்தல் வாசம் !
பரிதாபமாகப் பார்க்கின்றன
பேதைகள் சூடிய மல்லிகைப்பூக்கள் !!

நீ இளகிய மனம்
படைத்தவள்தானே !
எப்படிச் செய்தாய்
என் காதலுக்குக் கருக்கலைப்பு ?

உன் பிறந்தநாளன்று
நீ ஊதி அணைத்த
மெழுகுவர்த்தி –
அது நான்தான் !!

என் இலக்கும் நீதான் !
என் பாதையும் நீதான் !
அதில் சிதறிக்கிடக்கும்
முட்களும் நீதான் !!

நீ முத்து !
அதற்காக சிப்பிக்கா
வாழ்க்கைப்பட வேண்டும் ?