உன்னைப் பற்றி
ஆயிரம் எண்ணங்கள்
என் மனதில் இருப்பினும்
என் மனம் இன்னும்
வெறுமையாகத்தான் உள்ளது !!
நான்
இறந்த பிறகாவது
என் கண்களை விட்டு
நீங்கி விடு !
நான் கண்தானம்
கொடுக்கச் சம்மதித்திருக்கிறேன் !!
தென்றலிடம் …
நீலவானிடம் …
தூரத்தே தெரியும்
பச்சை மலைகளிடம் …
என் அறையின்
பழக்கமான சுவர்களிடம் …
இப்படிப் பலரிடம்
உன்னைப் பற்றி
நிறையவே சொல்லியிருக்கிறேன் !!
எனக்கும் மற்றவர்களுக்கும்
ஒரு வித்தியாசம் உண்டு !
அவர்கள்
காஷ்மீரைப் பற்றிக்
கவலைப்படுபவர்கள் !
நான்
காஷ்மீர் ரோஜாக்களைப்
பற்றிக் கவலைப்படுபவன் !!
உனக்குத் தெரியுமா ?
என் கனவில் கூட
நீ என்னைப் பார்த்துச்
சிரிக்கிறாய் !
ஆனால் பேசுவதில்லை !!
என் இலக்கணத்தில்
உன் பெயரில் வரும்
எழுத்துகள் மட்டுமே
உயிரெழுத்துகள் !!
நிலவாக இருந்தவள்
நட்சத்திரம் ஆகிவிட்டாள் !
நேற்றுவரைக்
காட்சி மட்டும் தந்தவள்
இன்று கண்சிமிட்டி விட்டாளே !!
நீ அருகில்
நிற்கும்பொழுது மட்டும்
தென்றல் வீசுகிறதே !
அட !
நீ விடும்
மூச்சுக் காற்றா !!
நட்பு என்கிறாய் !
பாசம் என்கிறாய் !
அன்பு என்கிறாய் !
நண்பன் என்கிறாய் !
இதைக்
காதல் என்;றும் சொல்லலாம்
என்பதை நீ அறிவாயா ?
நீ என்றோ
சிரித்ததை எண்ணித்தான்
இன்றும் நான்
சிரித்துக்கொண்டிருக்கிறேன் !!
பெண்ணே !
நீ புல்லாங்குழலா ?
முத்தமிட்டால்
சத்தம் எழுப்புகிறாயே !!
என் இதயத்தைத்
துளைக்காதே !
உனக்குத்தான்
வலிக்கும் !!