கடவுளுக்குப் பிறகு
இவனுக்குத்தான்
நான் பேசும்
எல்லா பாஷைகளும்
புரிகிறது!!
கடவுளிடம் பேச்சுவாக்கில்
கேட்டேன் -
‘இவனுக்குத் தந்தையாக இருக்க
எனக்குத் தகுதியுண்டா?’
மோவாயைத் தடவியபடி
கடவுள் சொன்னார் -
‘நானும் யோசிக்கின்றேன்,
இவனுக்குக் கடவுளாக இருக்க
எனக்குத் தகுதியுண்டா?’
சொர்க்கம் உண்மையா
என்று கேட்டேன்!
கன்னத்தில் முத்தம்
கொடுத்துச் சென்றான்!!
கடவுள் உண்மையா
என்று கேட்டேன்!
கண்ணடித்துச் சிரித்தான்!!
எதுவும் தெரியாத
என் மனைவி சொன்னாள்
‘சிந்தாமல் சாப்பிடு’ என்று!!
அர்த்தம் பொதிந்த
பார்வையில் சொன்னான்
‘நான் சிந்துவது
உன் பாக்கியம்’ என்று!!
உலகிலேயே இவன்
ஒருவன் தான்
கோபப்பட்டால்
முத்தம் தருகிறான்!
அதட்டினாலும்
அன்பைத் தருகிறான்!!
நான் செய்வதை எல்லாம்
அவனும் திருப்பிச் செய்வான்!
இப்பொழுதெல்லாம்
அவன் செய்வதை எல்லாம்
நானும் திருப்பிச் செய்கிறேன்!!
அவன் பேசுவது புரியாமல்
கடவுளைப் பார்த்தேன்!
சிரித்தபடி சொன்னார் -
‘அது மழலை மொழியில்
பிரபஞ்ச ரகசியம்’!!
நான் அழுகை வந்தால்
அடக்கிக் கொள்வேன்,
ஆண்கள் அழக்கூடாது என்று!
அடிக்கடி அழுது
என் ஆணவம் அழித்தான்,
‘பார் கடவுள் நானே அழுகின்றேன்’!!
கடவுள் எனக்கு
வாழ்த்து சொன்னார்
‘உன் மகனுக்கு
வயது இரண்டு’!!
தீர்க்கமாய் திருப்பிச் சொன்னேன் -
‘அவனுக்கில்லை
எனக்குத்தான் வயது இரண்டு’!!
After God,
he is the only one
who understands
every language I speak!!
In a passing talk with God,
I asked -
‘Am I worthy to be his father?’
Stroking his chin,
God said -
‘I too am wondering -
Am I worthy to be his God?’
‘Is Heaven real?’
I asked.
He kissed my cheek
and toddled away!!
‘Is God real?’
I asked.
He winked and laughed!!
My innocent wife said,
‘Eat without spilling!’
With a mischievous look
he said,
‘My spilling
is your blessing!!’
In all the world,
he alone -
when I am angry,
gives a kiss!
When I scold him,
gives love!!
Not understanding
what he says,
I looked at God.
Smiling, he said -
‘That, in baby language,
is the secret of the universe!!’
When tears come,
I hold them in -
‘Men must not cry!’
But by crying often,
he destroyed my ego -
‘Look, I am God,
and I still cry!!’
God wished me -
‘Your son
has turned two!’
But firmly I replied -
‘No, not him -
it is me
who has turned two!!’